search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே கேட்"

    ஓமலூர் அருகே ரெயில்வே கேட்டை திறக்காததால் கேட் கீப்பரை தாக்கி முதுகில் கடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓமலூர்:

    சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூருக்கு செல்ல ரெயில் பாதை உள்ளது.

    இந்த ரெயில் பாதையில் பயணிகள் ரெயில், அனல் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஏற்றி செல்லும் ரெயில்கள் என ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே கிராசிங் உள்ளது. இதில் ஓமலூர் அருகே உள்ள மாணத்தால் என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் சந்திரசேகரன் என்பவர் ரெயில்வே கேட் கீப்பராக நேற்று பணியில் இருந்தார்.

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்காக மாணத்தால் ரெயில்வே கேட் நேற்று மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குடிபோதையில் இருந்த 3 பேர் கும்பல் கேட்டை திறக்குமாறு கேட் கீப்பரிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ரெயில் மிக அருகில் வந்து விட்டதால் ரயில்வே கேட்டை திறக்க முடியாது என கேட் கீப்பர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கேட் கீப்பரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.



    மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென கேட் கீப்பரின் முதுகில் கடித்தார். பின்னர் சிக்னல்களுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனல் போர்டையும் அந்த கும்பல் உடைத்ததால் ரெயில்வே சிக்னல்கள் செயல் இழந்தன.

    இதனால் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கேட் கீப்பரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கேட் கீப்பரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சேலத்தில் இருந்து சென்ற ரெயில்வே பொறியாளர்கள் சிக்னல்களை சரி செய்தனர். தொடர்ந்து ரெயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews
    ரெயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஊழியரின் கைகளை துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RailwayGate #Gateman #CrossingGate
    புதுடெல்லி:

    டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள நரேலா என்கிற இடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கேட் கீப்பராக குந்தன் பதாக் (வயது 28) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த குந்தன் பதாக், எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதையொட்டி வழக்கம் போல் கேட்டை அடைத்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரெயில்வே கேட்டை உடனடியாக திறக்கும்படி குந்தன் பதாக்கிடம் கூறினர்.

    அதற்கு அவர் ‘ரெயில் மிக அருகாமையில் வந்துவிட்டது, எனவே கேட்டை திறக்க முடியாது’ என அவர்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து குந்தன் பதாக்கின் 2 கைகளையும் வெட்டினர். இதில் அவருடைய 2 கைகளும் துண்டாகின. மேலும் அவருடைய கழுத்து, கால் ஆகிய பகுதிகளிலும் பலமாக தாக்கிவிட்டு அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் குந்தன் பதாக்கை மீட்டு அருகில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    வெட்டப்பட்ட அவருடைய கைகளை இணைப்பதற்காக தீவிர அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RailwayGate #Gateman #CrossingGate
    கோவை அருகே ரெயில் வருவதற்காக பூட்டிய ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை என்று கூறியதால் ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள கவுண்டர் மில்ஸ் பகுதியில் இருந்து உருமாண்ட பாளையம், கணபதி, அன்னூர் சாலையில் கோவை- மேட்டுப்பாளையம் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது.

    இங்குள்ள உருமாண்ட பாளையம் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் பணியில் இருந்தார். மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதற்காக கண்ணன் ரெயில்வே கேட்டை பூட்டினார். அதன் பின்னர் கேட் திறக்கப்படவில்லை. இதனால் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.

    வாகன ஓட்டிகள் கேட் கீப்பர் கண்ணனிடம் ஏன் கதவை திறக்கவில்லை என கேட்டனர். அதற்கு அவர் கதவை திறக்க முடியவில்லை என பதில் அளித்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த பொதுமக்களில் ஒருவர் ரெயில்வே கேட்டை திறந்து பார்த்தார். உடனடியாக திறந்தது. இதனால் பொதுமக்கள் கேட் கீப்பர் கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கை கலப்பும் உருவானது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சங்கனூர், வெள்ளக்கிணர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கேட் கீப்பர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கண்ணனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் தகராறு செய்தனர்.

    இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. கேட் கீப்பரிடம் புகார் புத்தகத்தை கொடுங்கள். நாங்கள் அதில் எழுதி வைக்கிறோம் என பொதுமக்கள் கேட்டனர்.

    அதற்கு கண்ணன் உள்ளிட்ட மற்ற கேட் கீப்பர்கள் புத்தகத்தை கொடுக்காமல் கேட் கீப்பர் தங்கும் அறையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    மேலும் ரெயில்வே கேட்டும் திறந்து கிடந்தது. வாகன ஓட்டிகள் இரு புறமும் சென்று வந்தனர். இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர்.

    அதற்குள் கேட் கீப்பரிடம் தகராறு செய்த பொதுமக்கள், கேட் கீப்பர்கள் சென்றுவிட்டனர். கண்ணனும் அவர்களுடன் சென்றுவிட்டார். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு விட்டது.

    ஆனால் உருமாண்டம் பாளைத்தில் ரெயில்வே கேட் திறந்து இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து தற்காலிக கேட் கீப்பர் வரவழைக்கப்பட்டு ரெயில்வே கேட் பூட்டப்பட்டது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் அந்த வழியாக சென்றது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வரும் போது கேட் திறக்கப்பட்டு இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். எனவே பொறுப்பு இல்லாமல் செயல்பட்ட கேட் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதால், மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்படுகிறது.
    ஆலந்தூர்:

    சென்னையில் ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமால் இருக்க ரெயில்வே கேட் மூடப்பட்டு சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே ஜி.எஸ்.டி. சாலையையும், பழவந்தாங்கல் பகுதியையும் இணைக்கும் ரெயில்வே கேட் 16-ந் தேதி (அதாவது இன்று) முதல் மூடப்படுகிறது. அதன்பிறகு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பழவந்தாங்கல் மற்றும் மீனம்பாக்கம் சுரங்கப்பாதைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரெயில்வே கேட் மூடப்படுவதால், தண்டவாள பகுதியில் ரெயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தபிறகு, சென்னை மாநகராட்சியிடம், ரெயில்வே நிர்வாகம் ஒப்படைக்கும். அதன்பின்னர் சுரங்கப்பாதைகளை சாலைகளுடன் இணைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் செய்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
    ×